எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய மருத்துவபடிப்புகளுக்கான நீட் தகுதித் தேர்வு, ஐஐடி களில் சேர்வதற்கான JEE தேர்வு ஆகியவற்றை தள்ளி வைக்க முடியாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் இந்த தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என தாக்கலான மனு மீது நடந்த விசாரணையில் 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த இரண்டு தேர்வுகளும் திட்டமிட்டபடி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் செப்டம்பர் மாதம் நடக்கும் என தெரிவித்துள்ள நீதிமன்றம், மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடுவது ஆபத்தானது என்றும் கூறியுள்ளது.
வாழ்க்கையை நிறுத்துவது என்பது இயலாத காரியம் என்ற நீதிபதிகள் , உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்த தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
அடுத்த மாதம் 13 ஆம் தேதி நீட் தேர்வும், JEE மெயின் தேர்வுகள் அடுத்த மாதம் 1 முதல் 6 ஆம் தேதி வரையும், JEE அட்வான்ஸ்டு தேர்வுகள் அடுத்த மாதம் 27 ஆம் தேதியும் நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்துள்ளது.