தனியார் ரயில்களை இயக்கும் நிறுவனங்களே ரயிலின் நிறுத்தங்களைத் தேர்வு செய்துகொள்ளலாம் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் 109 வழித்தடங்களில் 150 ரயில்களை இயக்கத் தனியாருக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு தனியார் ரயில் போக்குவரத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ள நிலையில் பாம்பார்டியர், ஆல்ஸ்டாம், சீமென்ஸ் உள்ளிட்ட 23 நிறுவனங்கள் இதற்கு விருப்பம் தெரிவித்துள்ளன.
பயணக் கட்டணங்களை நிறுவனங்களே தேவைக்கேற்பத் தீர்மானித்துக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தெந்த நிறுத்தங்களில் ரயில் நின்று செல்வது என்பதை நிறுவனங்களே தீர்மானித்துக் கொள்ளலாம் என்றும், அந்தத் தடத்தில் செல்லும் அதிவிரைவு ரயிலின் நிறுத்தங்களைவிட எண்ணிக்கை மிகாமல் இருக்க வேண்டும் எனவும் விதிகளில் குறிப்பிட்டுள்ளது.
நிறுத்தங்களின் பட்டியலை முன்கூட்டியே ரயில்வே துறையிடம் கொடுக்க வேண்டும் என்றும், ஓராண்டுக்கு அது நடைமுறையில் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது.