நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே புதிதாக அமைக்கப்பட்டு ஒரு மாத காலமாக மூடிக்கிடந்த நிலத்தடி தொட்டியில் இறங்கிய தொழிலாளர்கள் இருவர் மூச்சடைப்பு ஏற்பட்டு இறந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பட்டணம் முனியப்பம்பாளையத்தில் புதிதாகக் கட்டப்படும் வீட்டின் அருகே கழிவு நீர் மற்றும் குடிநீர் சேமிப்புக்காக 10 அடி ஆழத்தில் இரண்டு நிலத்தடி தொட்டிகளை அமைத்துள்ளனர். சிமெண்ட் பூசப்பட்டு ஒரு மாத காலமாக மூடிக்கிடந்த அந்தத் தொட்டிகளின் மேற்கூரையை தாங்குவதற்காக தாங்கு கழிகள் பொருத்தப்பட்டிருந்தன.
அவற்றை அகற்ற ஒரு தொட்டிக்குள் 2 தொழிலாளர்கள் இறங்கியுள்ளனர். நீண்ட நேரமாக அவர்களின் பேச்சுகுரல் கேட்காததால் அடுத்தடுத்து 3 தொழிலாளர்கள் உள்ளே இறங்கியுள்ளனர்.
5 பேருமே உள்ளே மயக்கமடைந்த நிலையில், விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் 5 பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் சஞ்சய், முருகேசன் ஆகிய இருவர் உயிரிழந்தனர்.
ஒரு மாத காலமாக மூடிக்கிடந்ததால் ஆக்சிஜன் கிடைக்காமல் இருவரும் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் மெகராஜ், நாமக்கல் எம்.பி. சின்ராஜ் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.