பிரபல பின்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா நோய்த் தொற்று பாதிப்பால், உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
சென்னை, நுங்கம்பாக்கத்தில் வசித்து வருகிறார் பிரபல பின்னணிப் பாடகர் எஸ்பிபி. தற்போது 74 வயதான இவருக்குக் காய்ச்சல், சளி ஏற்பட்டதால் இந்த மாதம் 5 - ம் தேதி கொரோனா சிகிச்சை செய்துகொண்டார். சோதனையில் அவருக்குக் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு லேசான காய்ச்சல் மட்டும் இருந்ததால் வீட்டிலேயே ஓய்வெடுக்கலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.
ஆனால், வயோதிகம் காரணமாக மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெறத் தொடங்கினார் எஸ்பிபி. இதை, அவரே சமூக வலைத்தளத்தில் வீடியோவாக வெளியிட்டிருந்தார். எஸ்.பி.பி சிகிச்சை பெற்றுவந்த தனியார் மருத்துவமனை நிர்வாகம் அவ்வபோது அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டு வருகிறது. நேற்று வரை நல்ல உடல் நலத்துடன் இருந்த எஸ்.பி. பியின் உடல்நிலை நேற்றிரவு முதல் மோசமாகியுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போது, உடல் நிலை மோசமாகியிருப்பதால் எஸ்.பி.பி. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார். அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் ,எஸ்.பி.பி குணமடைய வேண்டும் என்பதே அவரின் ரசிகர்களின் வேண்டுதலாக இருக்கிறது.