உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் ஜூன் 27 - ம் தேதி உச்சநீதிமன்றத்தையும் ஜூன் 29 - ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பாப்டேவை விமர்சித்து சர்ச்சைக்குரிய ட்வீட்டுக்ளைப் பகிர்ந்தார்.
முதல் ட்வீட்டில், ”முறையான அவசர நிலைப் பிரகடனம் பிறப்பிக்கப்படாமல், கடந்த ஆறு ஆண்டுகளாக இந்தியாவில் ஜனநாயகம் சிதைக்கப்படுகிறது, அதற்கு உச்சநீதிமன்றம் எந்த அளவில் துணை புரிகிறது, குறிப்பாகக் கடந்த நான்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளும் எப்படி ஜனநாயக சிதைவுக்குப் பங்களித்துள்ளனர் என்பதை எதிர்காலத்தில் ஆய்வாளர்கள் பதிவுசெய்வார்கள்” என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.
இரண்டாவது ட்வீட்டில், “இந்தியக் குடிமக்கள் நீதித்துறையை அணுகமுடியாத படி உச்சநீதிமன்றமே முடங்கியிருக்கும் நிலையில், நாக்பூர் ராஜ்பவனில், பாஜக தலைவருக்குச் சொந்தமான 50 லட்சம் மதிப்புள்ள விலையுயர்ந்த மோட்டார் சைக்கிளை உச்சநீதிமன்ற தலை நீதிபதி மாஸ்க் அணியாமல், ஹெல்மெட் கூட போடாமல் ஓட்டுகிறார்” என்று ஹார்லி டேவிட்சன் பைக்குடன் வெளியான உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் படத்தைப் பகிர்ந்து விமர்சித்திருந்தார்.
இந்த பதிவுகளையடுத்து உச்ச நீதிமன்றம் தானாகவே முன் வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்து, ஜூலை 22 - ம் தேதி பிரசாந்த் பூஷனுக்கு நோட்டீஸ் அனுப்பியது. தனது பதிலைப் பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்த பிரசாந்த் பூஷன், ”நீதித்துறையை விமர்சிக்கும் நோக்கம் தனக்கு இல்லை. தலைமை நீதிபதி நிறுத்திவைத்திருந்த பைக்கில் அமர்ந்திருந்ததை கவனிக்காமல் ட்வீட் செய்துவிட்டேன்” என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த அருண் மிஷ்ரா, பி.ஆர்.கவாய் மற்றும் கிருஷ்ணா முரளி ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு பிரசாந்த் பூஷனை நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவித்துள்ளது. தண்டனை விபரம் ஆகஸ்ட் 20 - ம் தேதி அறிவிப்பதாகவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பிரசாந்த் பூஷனுக்கு அதிகபட்சம் ஆறு மாத சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.