கன்னியாகுமரி கொட்டாரம் பகுதியை சேர்ந்த டாக்டர் குமாரசுவாமி ஹாஸ்பிட்டலில், பெண் குழந்தை பெற்றெடுத்த இளம்பெண் பவித்ராவுக்கு அதிகளவு ரத்தப்போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
ஆபத்தான நிலையைக் கருதி ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லும் வழியில் பவித்ரா உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
மருத்துவமனை முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என புகார் எழுந்ததால், குமரி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ஜான் பிரிட்டோ, டாக்டர் குமாரசுவாமி மருத்துவமனைக்கு சென்று, பிரசவம் பார்த்த டாக்டர்கள் மற்றும் ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் விவரங்களை கேட்டறிந்து ஆய்வு செய்தார்.
விசாரணை நடத்திவிட்டு வெளியே வந்த இணை இயக்குனரின் காரை வெளியே விடாமல் முற்றுகையிட்ட பெண்ணின் உறவினர்கள், மருத்துவமனைக்கு சீல் வைக்கவேண்டும் என்று ஆவேசமாக கூறினர்.
அப்போது கூட்டத்தில் நின்ற இளைஞர்கள் சிலர் மருத்துவமனை மீது கவ்வீசி தாக்குதல் நடத்தினர். இதில் மருத்துவமனையின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து சிதறின.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பொதுமக்களை சமாதானப்படுத்தி வெளியே அனுப்பினார். சாலைக்கு வந்த இளைஞர்கள் ஆஸ்பத்திரியின் வாசலில் அமர்ந்து மறியல் செய்ததோடு அங்கிருந்த விளம்பர போர்டையும் ஆத்திரத்தில் உடைத்தனர். அப்போது அங்கு வந்த டிஎஸ்பி பாஸ்கரன் மறியல் செய்த பொதுமக்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தார்.