இளைஞர்களின் புதிய கண்டுபிடிப்புகள் சவாலான சூழல்களைக் கடந்து செல்ல நாட்டுக்கு உதவியாக இருக்கும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தேசியக் கல்விக்கொள்கையில் தரமான கல்விக்கு முன்னுரிமை அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இளைஞர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் என்னும் நிகழ்ச்சியில் காணொலியில் பங்கேற்றுப் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். கோவை கிருஷ்ணா கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரி மாணவர்களுடன் அவர் உரையாடினார். அப்போது, மழைப்பொழிவை முன்கூட்டிக் கணிக்கும் அமைப்பைக் கண்டுபிடித்த இளைஞர்களைப் பாராட்டினார். இந்தக் கண்டுபிடிப்பு வெற்றியடைந்தால் உழவர்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும் எனக் குறிப்பிட்டார். இந்திய இளைஞர்கள் புத்தாக்கம் மற்றும் படைப்பாற்றலுடன் திறமைகளின் களஞ்சியமாகத் திகழ்வதாகவும், கொரோனா தொற்றால் உலகின் போக்கே மாறிவரும் சூழலில் அவர்களுக்குச் சிறிய வழிகாட்டல் இருந்தால் நாட்டை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வார்கள் என்றும் தெரிவித்தார். தேசியக் கல்விக் கொள்கையில் தரமான கல்விக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். உயர்கல்வியில் மாணவர்களின் இடைநிற்றலைத் தவிர்க்கப் புதிய கல்விக் கொள்கை உதவும் எனத் தெரிவித்தார். மாணவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.