ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் கப்பல்கட்டும் தளத்தில் பிரமாண்ட கிரேன் சாய்ந்து விழுந்த கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் அரசுக்குச் சொந்தமான இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் உள்ளது. இங்குப் பராமரிப்புப் பணியின்போது தண்டவாளத்தில் இயங்கும் 60 அடி உயரமுள்ள மிகப்பெரிய கிரேன் சாய்ந்து விழுந்தது. அப்போது பணியில் இருந்த தொழிலாளர்கள் பலர் இதில் சிக்கிக் கொண்டனர்.
இந்த விபத்தில் நிகழ்விடத்திலேயே 11 பேர் உயிரிழந்ததாகவும், காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிதாக வாங்கப்பட்ட இந்த கிரேன் அதிக எடைகொண்ட பொருளைத் தூக்கியபோது நிலைதடுமாறிச் சாய்ந்ததாகத் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்ததும் தொழிலாளர்களின் குடும்பத்தினர் கப்பல் கட்டும் தளத்துக்கு விரைந்தனர். அவர்களைக் காவல்துறையினர் நுழைவாயிலிலேயே தடுத்து நிறுத்தினர்.