ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக 2 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.
ராஜீவ் கொலை வழக்கில் 28 ஆண்டுகளாக பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் உள்ளனர்.
இதில் புழல் சிறை கைதிகளுக்கு கொரோனா இருப்பதை சுட்டிக்காட்டி, அங்குள்ள தமது மகன் பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்க கோரி தாயார் அற்புதம்மாள் மனு தொடர்ந்திருந்தார்.
அந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சிறை விதிகளின்படி 2 ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே பரோல் அளிக்க முடியும் எனவும், 2019ம் ஆண்டில் பரோல் அளிக்கப்பட்டதால் இனி 2 ஆண்டுக்கு பிறகுதான் பரோல் வழங்க முடியும் எனவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில், 7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் தீர்மானம் 2 ஆண்டுகளுக்கு மேலாக ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதைக்கேட்ட நீதிபதி கிருபாகரன், 2 ஆண்டுகளாகியும் ஆளுநர் முடிவை அறிவிக்காதது ஏன்? அரசியல் சாசனத்தில் ஆளுநர் முடிவெடுக்க கால நிர்ணயம் செய்யப்படவில்லை என்றாலும், 2 ஆண்டுகள் கிடப்பில் வைத்திருக்கலாமா? என அதிருப்தி வெளியிட்டார்.
இதையடுத்து அரசு தரப்பில், ஆளுநருக்கு அனுப்பப்பட்ட தீர்மான விவகாரம் தொடர்பாக மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி விளக்கம் அளிப்பார் எனவும், ஆதலால் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையேற்று பரோல் கோரும் மனு குறித்து ஒரு வாரத்தில் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை 29 ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.