துப்பாக்கிச் சூடு வழக்கில் சிறையில் உள்ள திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மனின் ஜாமீன் மனுவைச் செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
திருப்போரூர் அருகே செங்காட்டில் நிலத்தகராறில் ஏற்பட்ட மோதல், துப்பாக்கிச்சூடு ஆகியவை தொடர்பாகச் சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன் உட்பட 13 பேரும், எதிர்த்தரப்பில் 6 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் இதயவர்மன் உட்பட இரு தரப்பிலும் 11 பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களைச் செங்கல்பட்டு மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி வசந்தலீலா காணொலியில் விசாரித்தார்.
இதயவர்மன் உட்பட 11 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்த அவர், ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தை அணுகும்படி அறிவுறுத்தினார்.
இதனால் இதயவர்மனுக்கு ஜாமீன் கோரி திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தை நாட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே இதயவர்மனை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிக் காவல்துறை தாக்கல் செய்த மனு புதனன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது.