புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடரை கிரண்பேடி புறக்கணித்த நிலையில், முதல் முறையாக துணைநிலை ஆளுநர் உரையில்லாமல், பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு காலையில் உணவு வழங்கும் கலைஞர் கருணாநிதி சிற்றுண்டி திட்டம், அரசுப் பள்ளிகளில் இறுதியாண்டு படிப்போர் இணையம் மூலம் கல்வி கற்க இலவச லேப்டாப், ஏழைகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
புதுச்சேரி சட்டப்பேரவையில், நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. இதில் துணைநிலை ஆளுநர் உரை இடம் பெறுவது வழக்கம்.
ஆனால் கிரண்பேடி முதலமைச்சர் நாராயணசாமிக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில், பட்ஜெட்டை படித்து பார்ப்பதற்கு அவகாசம் வேண்டும் என்று கூறி, பேரவையை பின்னர் நடத்திக்கொள்ளலாம் என தெரிவித்திருந்தார்.
ஆனால், மத்திய அரசின் அனுமதி பெற்ற பின்பே கூட்டத்தொடர் தொடங்குவதால், சட்டப்படி இதில் பங்கேற்கலாம் என்று, துணை நிலை ஆளுநருக்கு முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
இதனால் ஆளுநர் பங்கேற்பாரா? மாட்டாரா? என்ற கேள்வியுடன், 15 நிமிடங்கள் காத்திருந்த பிறகு, காலை 9.45 மணிக்கு புதுச்சேரி சட்டப்பேரவை கூடியது. சபாநாயகர் சிவக்கொழுந்து பேரவை நடவடிக்கைகளை தொடங்கி வைத்தார்.
துணைநிலை ஆளுநர் உரையாற்ற வராததால், அவரது உரையை ஒத்தி வைக்க குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திட்டமிட்டபடி பகல் 12.05-க்கு முதலமைச்சர் நாராயணசாமி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வார் என அறிவித்து பேரவையை சபாநாயகர் தற்காலிகமாக ஒத்திவைத்தார்.