சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், அதிக தேர்ச்சி விகிதத்துடன் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடமும், சென்னை மண்டலம் 2ம் இடமும் பிடித்துள்ளன.
சி.பி.எஸ்.இ 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பொதுத்தேர்வு நடத்தப்பட்ட நிலையில், ஒரு சில தேர்வுகள் மட்டுமே நடைபெற்றன.
ஊரடங்கால் தேர்வுகளை நடத்த முடியாத சூழலில், தேர்வுகளை ரத்து செய்வதாக சிபிஎஸ்இ அறிவித்தது. அகமதிப்பீடு தேர்வுகளில் மாணவர்களின் செயல்திறன் அடிப்படையில் விடுபட்ட தேர்வுகளுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் 12ஆம் வகுப்புக்கு நேற்று முன் தினம் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின.
இதையடுத்து சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் cbseresults.nic.in என்ற இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டன. நாடு முழுவதும் 18 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய 10ஆம் வகுப்பு தேர்வில் 91.46 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 99.28 சதவீத தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் மண்டலம் முதலிடமும். 98.95 சதவீதத்துடன் சென்னை மண்டலம் 2வது இடமும் பிடித்துள்ளது.