சென்னை காவல் ஆணையராக இன்று பொறுபேற்றுக்கொண்ட மகேஷ்குமார் அகர்வால், இனி காணொலி காட்சி மூலம் பொதுமக்களிடம் புகார்களை பெற்று விசாரிக்க போவதாக தெரிவித்துள்ளார்.
சென்னையின் 107வது காவல் ஆணையராக நியமிக்கப்பட்ட மகேஷ்குமார் அகர்வால் காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். 3 ஆண்டுகளாக சென்னை காவல் ஆணையராக இருந்து செயலாக்கப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ள ஏ.கே.விஸ்வநாதன் அவரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
தொடர்ந்து அனைவருக்கும் நன்றி தெரிவித்து விடைப்பெற்ற ஏ.கே.விஸ்வநாதனுக்கு காவல் துறையினர் அணிவகுப்பு மரியாதை அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புதிய காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், தனிமனித விலகல், முகக்கவசம் அணிவதை கடைப்பிடிக்க பொதுமக்களை வலியுறுத்தினார். மேலும் பொதுமக்களை சந்திக்க வேண்டிய அவசியம் இருப்பதால் காவல்துறையினர் கவனமாக பணியாற்ற வேண்டும் என கூறிய அவர், செல்போன், செயின் பறிப்பு குற்றங்களை தடுக்க புதிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.