கொரோனாவை விரட்ட யோகா உதவும் என்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குடும்பத்தினருடன் தினமும் பிரணாயாமம் செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
உலக யோகா தினத்தை முன்னிட்டு இன்று காலை பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார் .அப்போது கொரோனாவின் சங்கடமான காலத்தில் இன்று உலகமே யோகாவின் அவசியத்தை முன் எப்போதையும் விட அதிகமாக உணர்ந்திருப்பதாக மோடி தெரிவித்தார்.
குடும்பத்துடன் யோகாவை வீட்டில் இருந்தபடியே செய்யும்படி கேட்டுக் கொண்ட அவர், பிரணாயாமத்தை தினசரி வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாற்றும்படி வலியுறுத்தினார். கொரோனாவை எதிர்ப்பதற்கும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் யோகா உதவுவதாக மோடி குறிப்பிட்டார்.
யோகாவை யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்றும் இதற்கு சாதிமத பேதம் ஏதுமில்லை என்றும் மோடி தெரிவித்தார். உலகத்தை ஒன்றுபடுத்தும் ஆற்றல் யோகாவுக்கு இருப்பதாகவும் அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.
பகவத் கீதையின் வாசகத்தை மேற்கோள் காட்டிய மோடி, பகவான் கிருஷ்ணர் யோகத்தை கர்மத்துடன் இணைத்திருப்பதை சுட்டிக் காட்டினார். நமது செயல்களை சிறப்பாக செய்ய உதவும் யோகாவால் பல்வேறு துன்பங்களில் இருந்து விடுபட முடியும், வலிமையான ஒரு தேசத்தை உருவாக்கமுடியும் என்றும் மோடி தமது உரையில் தெரிவித்தார். சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தமது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.