இந்த நூற்றாண்டின் மிக நீண்ட சூரிய கிரகணம் இன்று விண்ணில் தோன்றுகிறது. வானில் நிகழும் வர்ணஜாலத்தை கண்டுகளிக்க ஏராளமானோர் உலகம் முழுவதும் ஆயத்தமாகி வருகின்றனர்.
பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் நேர்க்கோட்டில் வரும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. சூரிய கிரகணத்தின்போது, சூரியனின் உருவம் முற்றிலுமாகவோ அல்லது ஓரளவுக்கோ சந்திரனால் மறைக்கப்படுகின்றது.
முற்றிலும் மறைக்கப்படும் நிகழ்வின் போது நெருப்பு வளையம் போலவும், மின்னும் வைர மோதிரம் போலவும் சூரியன் காட்சியளிக்கிறது. ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசில்தான் இன்று நிகழவுள்ள சூரிய கிரகணத்தை உலகிலேயே முதல் முறையாக மக்கள் பார்க்க உள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக தெற்கு சூடான், எத்தியோப்பியா, யேமன், ஓமன், சௌதி அரேபியா, இந்தியப் பெருங்கடல் பகுதி, பாகிஸ்தான் ஆகியவற்றைக் கடந்து இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் தெரியும்.
இன்று காலை 10:12 மணிக்கு ராஜஸ்தானின் கர்சனா அருகே சூரியகிரகணம் தொடங்குகிறது. அதன் உச்சகட்டம் காலை 11:49 மணியளவில் தொடங்கி காலை 11:50 மணிக்கு முடிவடையும் என்று வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கிரகணத்தை ராஜஸ்தானில் உள்ள சூரத்கர் மற்றும் அனுப்கர், ஹரியானாவில் உள்ள சிர்சா, ரதியா, குருக்ஷேத்ரா, மற்றும் உத்தரகண்டில் உள்ள டேராடூன், சம்பா, சமோலி, ஜோஷிமத் ஆகிய இடங்களில் நெருப்பு வளையமாக ஒரு நிமிடம் மட்டுமே காணமுடியும்.
சென்னையில் காலை 10:22 மணிக்கு தொடங்கும் இந்த சூரிய கிரகணம் மதியம் 1:41 வரையில், அதிலும், அதிகபட்ச கிரகணம் 11:58 மணிக்கு தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 34 விழுக்காடு மட்டுமே சந்திரன் சூரியனை மறைக்கும் என்பதால் வடமாநிலங்களைப் போல முழு சூரிய கிரகணம் தெரியாது.
சூரிய கிரகணத்தின்போது சூரியனை நேரடியாக வெற்றுக் கண்களால் காணக்கூடாது என்று வானியல் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். அப்படிப் பார்த்தால் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ கண் பார்வை பறிபோகும் வாய்ப்பு உள்ளதாகக் கூறுகின்றனர்.
சூரிய கிரகணத்தை பாதுகாப்பான முறையில் பார்க்க அலுமினிய மைலர், கறுப்பு பாலிமர், வெல்டிங் கிளாஸ் நிழல் எண் 14 போன்ற சரியான பில்டர்களைப் பயன்படுத்தலாம். தொலைநோக்கி மூலம் ஒரு வெள்ளைப் பலகையில் சூரியனின் படத்தைக் காண்பதும் பாதுகாப்பானது என்றும் அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.