கால்வன் பள்ளத்தாக்கில் நேரிட்ட மோதலின்போது சிறைபிடித்த 2 ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 10 வீரர்களை நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு சீனா விடுவித்துள்ளது.
லடாக்கின் கிழக்கில் அமைந்துள்ள கால்வன் பள்ளத்தாக்கு பகுதியில் 15ம் தேதி இரவு இந்தியா, சீனா வீரர்கள் இடையே திடீரென கைகலப்பு நேரிட்டு மோதல் வெடித்தது. இதில் இருதரப்பினரும் கற்கள், உருட்டு கட்டைகள், இரும்பு கம்பிகளை கொண்டு பரஸ்பரம் தாக்கிக் கொண்டனர். இந்தத் தாக்குதலில் இந்திய தரப்பில் கர்னல் உள்ளிட்ட 20 வீரர்கள் உயிரிழந்தனர். சீன தரப்பில் 43 பேர் வரை காயம் மற்றும் உயிரிழந்திருக்கலாம் என தகவல் வெளியானது.
கால்வன் பள்ளத்தாக்கில் நேரிட்ட மோதலின்போது 2 ராணுவ அதிகாரிகள் உள்பட 10 இந்திய வீரர்களை சீன வீரர்கள் பிடித்து வைத்தனர். அவர்களை விடுவிப்பது குறித்து சீன ராணுவ மூத்த அதிகாரிகளுடன், இந்திய ராணுவ மூத்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின்படி, 10 பேரையும் சீனா நேற்று மாலை விடுவித்தது. இதைத் தொடர்ந்து 10 பேரும் இந்திய பகுதிக்குள் நேற்று மாலை திரும்பி வந்தனர்.
ராணுவ வீரர்கள் யாரும் காணாமல் போகவில்லை என இந்திய வெளியுறவு அமைச்சகமும், இந்திய ராணுவம் அறிவித்திருந்ததால், இந்த பேச்சுவார்த்தை குறித்த தகவல் வெளிவராமல் ரகசியம் காக்கப்பட்டதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கால்வன் பள்ளதாக்கில் நேரிட்ட மோதலில் இந்திய தரப்பில் காயமடைந்த 76 வீரர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாக ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர். அவர்களில் யாருடைய உடல்நிலையும் கவலையளிக்கும் வகையில் இல்லை எனவும், அனைவரும் குணமடைந்து வருவதாகவும் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
76 வீரர்களில் 18 பேர், லே-யில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்கள் 15 நாள்களில் பணிக்கு திரும்புவர் எனவும், பிற மருத்துவமனையில் இருக்கும் எஞ்சிய 58 பேர் ஒரு வாரத்தில் பணிக்கு திரும்புவர் எனவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, கடல் மட்டத்தில் இருந்து 15 ஆயிரம் அடி உயரத்தில், கால்வன் பள்ளத்தாக்கில் அண்மையில் கைகலப்பு நேரிட்ட இடத்திலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கும் குறைவான தூரத்தில் ஓடும் கால்வன் நதியை திசை திருப்பி விடவோ அல்லது தடுக்கவோ சீனா முயற்சிப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அந்த பகுதியில் சீனா புல்டோசர்களை நிறுத்தியிருப்பது தொடர்பான செயற்கைக்கோள் படங்களும் வெளியாகியுள்ளன.