ஊரடங்கு விதிகளை மீறி தேவையின்றி வெளியே சுற்றினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் எச்சரித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் வெள்ளிக்கிழமை முதல் 12 நாட்களுக்கு சென்னை அண்ணா சாலையில் ஆம்புலன்ஸ் தவிர மற்ற வாகனங்களுக்கு அனுமதி கிடையாது என்றார். அனுமதிக்கப்பட்ட அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்கள் உரிய அடையாள அட்டையை பெரிய அளவில் லேமினேட் செய்து கழுத்தில் மாட்டிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
வியாபாரிகள் நேர கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், கடைகளில் ஏசியை இயக்க கூடாது என்றும் காவல் ஆணையர் வலியுறுத்தினார்.
ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரிபவர்களுக்கு நூதன தண்டனைகள் வழங்கப்படாது என்றும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். போலி இ பாஸ் வைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.
சென்னையில் 17 ஆயிரம் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள் என்றும், கூடுதலாக 1000 போலீசார் வரவழைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
நகரில் 288 இடங்களில் சோதனைசாவடி அமைக்கப்படுவதாக குறிப்பிட்டார்.
சென்னை காவல்துறையில் இதுவரை 788 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 300 பேருக்கு மேல் குணமடைந்துள்ளதாக குறிப்பிட்டார். விலை மதிப்பில்லாத உயிர்களை இழந்து கொண்டிருப்பதால், பொதுமக்கள் கட்டுப்பாடுகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.