நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை பின்னணியில் சல்மான் கான் உள்பட எட்டு பிரபலங்கள் இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டு நீதி மன்றத்தை வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் பாலிவுட் திரையுலகில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது.
கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று மும்பையில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். இவர் கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றவர்.
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும், முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவரின் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தார்கள். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் உறுதி செய்யப்பட்டது. தூக்குக் கயிறு கழுத்தை இறுக்கியதில் மூச்சு திணறித்தான் மரணத்தைத் தழுவினார் என்று போஸ்ட்மார்ட்டம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதில் திடீர் திருப்பமாக வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா என்பவர் பீகார் மாநிலம் முஸாபர்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் பிரபல நடிகர் சல்மான் கான், கரன் ஜோகர், சஞ்சய் லீலா பன்சாலி, ஏக்தா கபூர் உள்ளிட்ட எட்டு பேர் தான் சுஷாந்த் சிங் ராஜ்புத்தைத் தற்கொலைக்குத் தூண்டினார்கள். அடுத்தடுத்து ஏழு படங்கள் வாய்ப்பைப் பறித்ததால் தான் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்குத் தூண்டப்பட்டார். எனவே இவர்கள் மீது சட்டப்பிரிவு 306, 109, 504, 506 ஆகியவற்றின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
இந்த விவகாரம் பாலிவுட் திரைத்துறையில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது...