நாடு முழுவதும் மேலும் 10,974 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளதால், அத்தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை மூன்றரை லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும் மராட்டியத்தில் ஏற்கனவே விடுபட்டுப்போன 1328 பலி எண்ணிக்கையையும் சேர்த்ததால் இந்தியாவில் ஒட்டு மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாள்களாக கொரோனா பரவல் தீவிரம் அடைந்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்து 974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கொரோனா தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 3 லட்சத்து 54 ஆயிரத்து 65ஆக அதிகரித்துள்ளது.
இதேபோல் மகாராஷ்டிராவில் கொரோனா பாதித்து உயிரிழந்தும், அந்த பட்டியலில் சேர்க்கப்படாமல் இருந்த 1,328 பேரையும் சேர்த்து, நாடு முழுவதும் மேலும் 2,003 பேர் கொரோனாவால் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் சுமார் 437 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 903ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் மருத்துவமனைகளில் 1,55,227 பேர் சிகிச்சை பெறும் நிலையில், 1,86,935 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்
நாட்டில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமான மகாராஷ்டிராவில் அத்தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 1,13,445ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,537ஆகவும் அதிகரித்துள்ளது.
அதற்கடுத்து அதிகம் பாதிக்கப்பட்ட 2ஆவது மாநிலமான தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 48,019ஆகவும், டெல்லியில் 44,688ஆகவும், குஜராத்தில் 24,577ஆகவும், உத்தர பிரதேசத்தில் 14,091ஆகவும் உயர்ந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில், மேற்குவங்கம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 11 ஆயிரத்தை கடந்துள்ளது. இதேபோல் பிற மாநிலங்களிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும், உயிரிழந்தோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.