லடாக் கல்வான் பள்ளத்தாக்கில், இந்திய - சீன எல்லையில் இந்திய ராணுவ அதிகாரி மற்றும் இரண்டு ராணுவ வீரர்கள் சீன ராணுவத்தால் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கொல்லப்பட்ட வீரர்கள் துப்பாக்கியால் சுடடுக் கொல்லப்படவில்லை. சீன வீரர்களுக்கும் இந்திய வீரர்களுக்கும் ஏற்பட்ட கைகலப்பில் மூன்று இந்திய வீரர்கள் பலியானதாக சொல்லப்படுகிறது.
லடாக்கில் உள்ள இந்திய - சீன எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் நீண்ட நாள்களாகவே பதற்றம் நிலவி வந்தது. இரண்டு தரப்பினரும் ஆயுதங்களையும் வீரர்களையும் எல்லையில் குவித்துக்கொண்டிருந்தனர். இதனால், பதற்றத்தை மேலும் அதிகமாக்கியது. எல்லையில் பதற்றத்தைக் குறைக்க இரண்டு தரப்பிலும் நடந்த பேச்சுவார்த்தை முடிவில் படைகளை வாபஸ் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நேற்றிரவு இந்திய - சீன வீரர்கள் தங்களது படைகளையும் தளவாடங்களையும் அப்புறப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அப்போது நடைபெற்ற கைகலப்பில் தான் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியிருக்கிறது.
இந்தக் கைகலப்பில் இந்தியத் தரப்பில் ராணுவ அதிகாரி மற்றும் இரண்டு இந்திய வீரர்களும் சீன தரப்பில் நான்கு வீரர்களும் இறந்திருக்கலாம் என்கிறார்கள் ராணுவ அதிகாரிகள். தற்போது பதற்றத்தைக் குறைக்க இந்திய - சீன ராணுவ அதிகாரிகள் தரப்பிலான பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கின்றன.
இந்த சம்பவம் குறித்து சீன வெளியுறவுத் துறை, "இந்திய வீரர்கள் எல்லை தாண்டி சீன வீரர்களைத் தாக்கியிருக்கிறார்கள். இந்தியா ஒருதலைப்பட்சமாக பிரச்னையைப் பெரிதுபடுத்தும் விதமாக எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது" என்று ஏப்.எப்.பி செய்தி நிறுவனம் வாயிலாகக் கூறியிருக்கிறது.
மேலும், "திங்கள் கிழமை மட்டும் இரண்டு இந்திய வீரர்கள் இரண்டு முறை எல்லை கடந்து சீன எல்லைக்குள் நுழைந்தனர். சீன ராணுவ வீரர்களைத் தனிப்பட்ட முறையில் சீண்டியும், தூண்டியும் சண்டையிட்டனர். அதனால் தான் மோசமான விளைவு ஏற்பட்டிருக்கிறது" என்று சீன வெளியுறவுத் துறை சீனா குளோபல் டைம்ஸில் செய்தி வெளியிட்டிருக்கிறது. இந்த சம்பவத்தால் இந்தியா சீனாவுக்கு இடைப்பட்ட 3500 கி.மீ தொலைவு முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த சம்பவம் குறித்து இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாதுகாப்புப் படைகளின் தலைமைப் படை ஜெனரல் பிபின் ராவத், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் முப்படைத் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சீனாவின் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தலைமைத் தளபதி தனது சீன பயணத்தை ரத்து செய்திருக்கிறார். இந்தத் தாக்குதலில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி என்பவரும் மரணமடைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.