இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்சனை தொடர்பாக இருநாட்டு ராணுவ உயரதிகாரிகள் மட்டத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. அமைதிப் பேச்சுவார்த்தையின் மூலம் பிரச்சனைக்கு தீர்வுகாண இருநாட்டு அரசுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.
கிழக்கு லடாக் பகுதியில் கடந்த மாதம் 5ம் தேதி இந்திய ராணுவ வீரர்களுடன் ஏற்பட்ட கைகலைப்பை தொடர்ந்து, சீனா திடீரென அப்பகுதியில் அதிகப்படியான ராணுவப்படைகளை குவித்தது.
இதையடுத்து, பாதுகாப்பு கருதி இந்திய ராணுவமும் அங்கு அதிகளவில் குவிக்கப்பட்டதால், இருநாடுகளுக்கும் இடையே அசாதாரன சூழல் நிலவி வருகிறது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர இருதரப்பு ராணுவ அதிகாரிகள் இடையே பல கட்ட பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டும் சுமூக முடிவும் எதுவும் எட்டப்படவில்லை.
இதைதொடர்ந்து, இந்திய தரப்பில் லெப்டினண்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் தலைமையிலான குழு, சீன உயர்மட்ட ராணுவ அதிகாரிகள் குழுவுடன் எல்லைப்பகுதியில் இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளது.
இருதரப்பும் கொண்டுள்ள பல்வேறு மாறுபட்ட நிலைப்பாடுகள் காரணமாக, பேச்சுவார்த்தையில் முடிவுகள் ஏதும் எட்டப்படாமல் இந்தப் பிரச்சனை மேலும் சில மாதங்கள் நீடிக்கும் என கருதப்படுகிறது. சீனாவை ஒட்டியுள்ள எல்லைப்பகுதியில் இந்தியா உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு இருப்பதால் உருவாகியுள்ள இந்த சூழல், டோக்லாம் பகுதியில் ஏற்பட்ட பிரச்சனையை காட்டிலும் நீண்ட நாட்கள் நீடிக்கும் எனக் கூறப்படுகிறது.
லடாக்கின் பாங்காங்சோ ஏரி பகுதியிலும், கால்வான் பள்ளத்தாக்கு அருகேயும் இந்தியா மேற்கொள்ளும் சாலை மற்றும் பாலம் போன்றவற்றின் கட்டுமானப் பணிகளுக்கு எதிர்ப்பு காட்டவே சீனா இதுபோன்ற செயலில் ஈடுபட்டு வருகிறது.
இந்த உட்கட்டமைப்பு பணிகளை நிறைவு செய்தால் எல்லைப்பகுதியில் சீனாவின் அத்துமீறலுக்கு, இந்தியாவால் தக்க பதிலடி அளிக்க முடியும் என்பதால் இப்பணிகளை தடுக்க சீனா முயற்சித்து வருகிறது.
மேலும், எல்லையை ஒட்டியுள்ள தவுலத் பெக் ஓல்டி (Daulat Beg Oldie) பகுதியில் இந்திய ராணுவத்தின் இருப்பை தவிர்த்து, அங்கிருந்து எளிமையாக பாகிஸ்தானை தொடர்பு கொள்வதற்கான இணைப்பு சாலையை அமைக்க சீனா முயற்சித்து வருகிறது.
சீனாவின் இந்த முயற்சி இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைய வாய்ப்புள்ளதோடு, சியாச்சின் மலைப்பகுதியில் உள்ள இந்திய ராணுவ வீரர்களுக்கு ஆயுதங்களை விநியோகிக்கும் இடமான, ஷியோக் ஆற்று பகுதியிலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்த வழிவகை ஏற்படும். எனவே இந்த விவகாரங்களில் இந்தியா சமரசம் செய்துகொள்ள வாய்ப்பில்லை.
இதுபோன்ற காரணங்களால் எல்லைப் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே முரண்பாடுகள் நிலவி வருவதால், எல்லைச் சிக்கலுக்கு பேச்சுவார்த்தை மூலம் உடனடி தீர்வு கிடைப்பது என்பது எளிதல்ல எனக் கூறப்படுகிறது.