மகாராஷ்டிரத்தை அச்சுறுத்திய நிசர்க்கா புயல் கரையைக் கடந்தது. அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் ஓரளவே பொருட்சேதம் ஏற்பட்டுள்ளதுடன், உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டது.
கிழக்கு மத்திய அரபிக் கடலில் உருவான நிசர்க்கா புயல் வடகிழக்குத் திசையில் நகர்ந்து புதன் பிற்பகலில் மும்பைக்குத் தெற்கே உள்ள ராய்காட் மாவட்டத்தில் கரையைக் கடந்தது. அலிபாக், பான்வெல், மும்பை வழியே வடகிழக்கு நோக்கிச் சென்ற இந்தத் தீவிரப் புயலால் மணிக்கு நூறு கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியதுடன் பலத்த மழையும் பெய்தது. இதனால் பல இடங்களில் மரங்கள் முறிந்தும் வேருடன் சாய்ந்தும் விழுந்தன.
ஒரு சில இடங்களில் மின்கம்பங்களும் சாய்ந்து விழுந்தன. ,இதனால் ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. வீடுகளின் மீது வேய்ந்திருந்த கூரைத் தகடுகளும் காற்றின் வேகத்தைத் தாக்குப் பிடிக்க முடியாமல் பிய்ந்து விழுந்தன.
புயல் பாதித்த பகுதிகளில் 85 பெரிய மரங்கள் சாய்ந்து விழுந்ததாகவும், இவற்றில் சில மரங்கள் வீடுகளின் மீது விழுந்ததாகவும், 11 மின்கம்பங்கள் சாய்ந்ததாகவும் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாகச் சாய்ந்த மரங்களைக் கருவிகள் கொண்டு அறுத்து அகற்றும் பணியில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.