இந்தியா மீண்டும் பொருளாதார வளர்ச்சியை அடையும் என்றும், அது ஒன்றும் கடினமானது அல்ல என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சிஐஐ எனப்படும் இந்தியத் தொழில் கூட்டமைப்பின் ஆண்டுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் உரையாற்றினார். இப்போதுள்ள சூழலில் ஒருபுறம் நாட்டு மக்களின் உயிரைக் காக்கவும், மற்றொருபுறம் பொருளாதாரத்தை நிலைநிறுத்தவும் வேண்டியுள்ளதாகத் தெரிவித்தார்.
பொருளாதாரத்தை மீண்டும் வலுப்படுத்துவது நமது உயர் முன்னுரிமைகளில் ஒன்றாகும் என்றும், அரசு உடனடியாக முடிவுகளை எடுத்து வருவதால் நம் நாடு உறுதியாகப் பொருளாதார வளர்ச்சியை மீண்டும் அடையும் என்றும் குறிப்பிட்டார்.
சுரங்கத்துறை, மின்துறை, ஆராய்ச்சி, தொழில்நுட்பம் என ஒவ்வொன்றிலும் இளைஞர்களுக்குப் பல புதிய வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். நோக்கம், சேர்த்தல், முதலீடு, உட்கட்டமைப்பு, புத்தாக்கம் ஆகிய ஐந்தும் இந்தியாவின் வளர்ச்சியை விரைவுபடுத்த முதன்மையானவை எனக் குறிப்பிட்டார்.
உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியாவில் பொருட்களைத் தயாரிப்பதே இப்போதைய தேவை எனவும் குறிப்பிட்டார். உலகம் நம்பகமான கூட்டாளியை எதிர்நோக்குவதாகவும், அதற்கான திறமையும் வலிமையும் இந்தியாவிடம் உள்ளதாகவும் தெரிவித்தார். சிக்கலான காலக்கட்டத்தில் மனிதாபிமான அடிப்படையில் 150க்கு மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா மருந்துகளை அனுப்பி வைத்ததாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.