தமிழகத்திலும் ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அதிக நோய்ப்பரவல் கொண்ட சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் மட்டும் பொது பேருந்து போக்குவரத்துக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சலூன் கடைகள் திறப்பு உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளும் சென்னைக்கு அளிக்கப்பட்டுள்ளன. அவை என்னென்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்...
சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பொதுப் போக்குவரத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் ஜூன் 1ம் தேதி முதல் பல்வேறு விதமான தளர்வுகள் அமலுக்கு வருகின்றன.
அதன்படி தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவை நிறுவனங்கள், 20 சதவீதம் அல்லது அதிகபட்சம் 40 பணியாளர்களுடன் இயங்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான போக்குவரத்தை அந்தந்த நிறுவனங்களே ஏற்பாடு செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து தனியார் நிறுவனங்களும் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. எனினும், இயன்ற வரை பணியாளர்கள் வீட்டிலிருந்து பணிபுரிவதை தனியார் நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஷாப்பிங் மால்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள், பெரிய நகை மற்றும் ஜவுளி கடைகள் 50 விழுக்காடு பணியாளர்களுடன் செயல்படலாம். ஒரே நேரத்தில் அதிகபட்சம் 5 வாடிக்கையாளர்கள் மட்டும் கடைக்குள் வருவதை உறுதி செய்து, தகுந்த இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், கடைகளில், குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு உத்தரவின்படி ஜூன் 8ம் தேதி முதல் உணவகங்கள் மற்றும் தேநீர்க் கடைகளில் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் நோக்கத்துடன் உணவகங்கள் மற்றும் தேநீர்க்கடைகளில் உள்ள மொத்த இருக்கைகளில் 50 விழுக்காடு இருக்கைகளில் மட்டும் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவகங்களிலும் குளிர் சாதன இயந்திரங்கள் இருப்பினும் அவை இயக்கப்படக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே போல் டீ கடைகள், உணவு விடுதிகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள் ஆகியவை காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களில், ஓட்டுநர் தவிர்த்து, மூன்று பயணிகள் மட்டுமே பயணிக்கவும், மண்டலங்களுக்குள் தமிழக அரசின் இ-பாஸ் இன்றி பயணிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதே போல் ஆட்டோக்களிலும் ஓட்டுநர் தவிர்த்து, இரண்டு பயணிகள் மட்டுமே பயணிக்கலாம் என்றும், சைக்கிள் ரிக்ஷா அனுமதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முடிதிருத்தும் மற்றும் அழகு நிலையங்கள் குளிர் சாதன வசதியைப் பயன்படுத்தாமல் அரசு தனியாக வழங்கும் நிலையான செயல்பாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர பெருநகர சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பணிபுரியும் ஒவ்வொரு தூய்மைப் பணியாளருக்கும் சிறப்பினமாக 2,500 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் சென்னை மாநகராட்சியில் நோய்த்தொற்று தீவிரமாக உள்ள நெரிசலான குடிசைப் பகுதிகளில் வாழும் மக்களை முன்னெச்சரிக்கையாக ஆய்வு செய்து பரிசோதனைக்கு உட்படுத்தி குறைந்தபட்சம் 7 நாட்களாவது தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்கவைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு முகாம்களில் தங்க வைக்கப்படுபவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சியில் மட்டும் அவர்கள் முகாம்களில் இருந்து வீடு திரும்பும்போது தலா 1,000 ரூபாய் ரொக்க நிவாரணம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.