"ஒன்றிணைவோம் வா" திட்டத்தின் கீழ் பெறப்பட்டதாக, திமுக சார்பில் தமிழக அரசிடம் வழங்கப்பட்ட மனுக்கள் போலியானவை என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குற்றம்சாட்டியுள்ளார்.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முதலமைச்சரின் உறுதியான நடவடிக்கைகளால் கொரோனா பரவலும், இறப்பு விகிதமும் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
இதுபோன்ற கடுமையான சூழலிலும் அனைத்து குடும்ப அட்டைத்தாரர்களுக்கும் ஏப்ரல் மற்றும் மே மாதத்துக்கான பொருட்கள் விலையின்றி வழங்கி, மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்துள்ளதாகவும், ஜூன் மாதத்துக்கான பொருட்களுக்கு நாளை முதல் டோக்கன்கள் வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
திமுக-வின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ், தலைமை செயலாளரிடம் வழங்கப்பட்ட 98 ஆயிரத்து 752 மனுக்களும் போலியானவை என்று கூறிய காமராஜ், அதற்கு ஆதாரம் என்று கூறி சில வீடியோக்களை திரையிட்டார்.
போலியான மனுக்கள் மீது மாவட்ட ஆட்சியர்கள் உரிய விசாரணை நடத்தி வருவதாக கூறிய அவர், எதிர்க்கட்சி தலைவர் இதுபோன்ற மலிவான அரசியல் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.
இதனிடையே, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி, டி.கே.எஸ். இளங்கோவன், "ஒன்றிணைவோம் வா" திட்டத்தின் கீழ், மக்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கின்றனர் என்றும், தொலைபேசி எண் மூலம் உதவி கேட்டவர்கள் விவரங்களே அரசுக்கு தெரிவிக்கப்பட்டன என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுமார் 1 லட்சம் மனுக்கள் தலைமைச் செயலரிடம் வழங்கப்பட்டன என்றும், இதை நான்கைந்து பேர் குறை சொல்லிப் பேசுகின்றனர் என்றால், அவர்களாகப் பேசுகிறார்களா அல்லது சொல்லிக் கொடுத்ததை பேசுகிறார்களா எனத் தெரியவில்லை என்றும் இளங்கோவன் கூறினார்.