சென்னை மாநகராட்சியின் அண்ணாநகர் மண்டலத்தில் ஒரே நாளில் 74 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த மண்டலத்தில் பாதிப்பு ஆயிரத்து 49 ஆக உயர்ந்துள்ளது.
6 லட்சத்து 43 ஆயிரத்து 895 மக்கள் தொகை கொண்ட அண்ணா நகர் மண்டலத்தில் சுமார் ஒரு லட்சத்து 60 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன.
கோயம்பேட்டிற்கு அருகில் இருக்கும் பகுதி என்பதால் மே மாத தொடக்கத்தில் தான் இம்மண்டலத்தில் கொரோனா பரவ தொடங்கியது. அரும்பாக்கம், அயனாவரம், அமைந்தகரை, புரசைவாக்கம் ஆகிய பகுதிகளில் பாதிப்பு அதிகமுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
இம்மண்டலத்தில் உள்ள 15 வார்டுகளிலும் தனித்தனியாக சுகாதார பணியாளர் குழுக்களை களமிறங்கி பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதுவரை இந்த மண்டலத்தில் 13 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அதே வேளையில் 461 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.