சென்னை மாநகராட்சியின் தேனாம்பேட்டை மண்டலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. தொற்று அதிகரித்த காரணம் குறித்து செய்தித் தொகுப்பை பார்க்கலாம்...
திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மயிலாப்பூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தேனாம்பேட்டை மண்டலத்தில் 7 லட்சத்து 62 ஆயிரத்து 634 பேர் உள்ளனர். இந்த மண்டலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வெள்ளியன்று ஆயிரத்தைத் தொட்டது. சனிக்கிழமை மேலும் 40 பேருக்குப் புதிதாகத் தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதியில் மட்டும் 550க்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவல்லிக்கேணியில் டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்தவர்களால் முதலில் தொற்று பரவியது. ஐஸ் ஹவுஸ், வி.என்.பிள்ளை தெரு, கஜபதி தெரு உள்ளிட்ட பகுதிகளில் சமூக ஆர்வலர் ஒருவர் மூலம் நூற்றுக்கு மேற்பட்டோருக்குத் தொற்று பரவியது.
கோயம்பேட்டில் இருந்து காய்கறிகள் வாங்கிவந்து மீர்சாகிப் பேட்டை சந்தையில் விற்றவர் மூலம் காய்கறி வாங்கிச் சென்றவர்களுக்குத் தொற்று பரவியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மீர்சாகிப் பேட்டை சந்தை மூடப்பட்டு, ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தற்காலிகச் சந்தை திறக்கப்பட்டது.
தேனாம்பேட்டை சந்தையில் சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் மக்கள் நெருக்கமாக நின்று பொருட்களை வாங்கியதால் அந்தச் சந்தையும் மூடப்பட்டது. மேலும் தொற்று பரவாமல் தடுக்க இது வரை மொத்தம் 313 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுச் சாலைகள், தெருக்கள், வீடுகள் என அனைத்துப் பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது.
நாள்தோறும் 200 பேருக்குக் குறையாமல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவான நடவடிக்கையால், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், அதற்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்தால்தான் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.