ஜூன் முப்பதாம் தேதி வரை முன்பதிவு செய்யப்பட்ட அனைத்துப் பயணச் சீட்டுகளையும் ரயில்வே துறை ரத்து செய்துள்ளது. கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு கடைப்பிடிப்பதால் மார்ச் இறுதிவாரம் முதல் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஊரடங்கு 3 முறை நீட்டிக்கப்பட்டதையடுத்து மே 17ஆம் தேதி வரை அனைத்துப் பயணிகள் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜூன் முப்பதாம் தேதி வரையுள்ள காலத்துக்கு முன்பதிவு செய்யப்பட்ட பயணச்சீட்டுக்கள் அனைத்தையும் ரத்து செய்வதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. பயணக் கட்டணம் முழுவதும் திருப்பிச் செலுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் பெரிய நகரங்களிடையான 15 சிறப்பு ரயில்களும், தொழிலாளர்கள் சொந்த ஊருக்குச் செல்வதற்கான சிறப்பு ரயில்களும் வழக்கம்போல் இயங்கும் என அறிவித்துள்ளது. இதனால் ஜூன் முப்பதாம் தேதி வரை வழக்கமான ரயில் போக்குவரத்து கிடையாது என்பது உறுதியாகியுள்ளது.