பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றுகிறார்.
மே 17ஆம் தேதிக்குப் பிறகு எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.நாடு தழுவிய 3ஆம் கட்ட ஊரடங்கு, வரும் 17ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதை முன்னிட்டு, முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நேற்று 6 மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
முதல் கட்ட ஊரடங்கிற்கான நடவடிக்கைகள் இரண்டாம் கட்டத்தில் தேவைப்படவில்லை என்றும், அதேபோல, மூன்றாம் கட்ட ஊரடங்கிற்கான நடவடிக்கைகள் 4ஆம் கட்டத்திற்கு தேவையில்லை என்றும் அவர் கூறினார். இதன் மூலம், குறைந்த கட்டுப்பாடுகள், அதிக தளர்வுகளுடன் ஊரடங்கு நீடிக்கும் என அப்போது பிரதமர் மோடி சூசகமாகக் குறிப்பிட்டார்.
இதற்கான விரிவான செயல்திட்டங்களை மாநில அரசுகள், வரும் 15ஆம் தேதிக்குள் மத்திய அரசுடன் பகிர்ந்துகொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு இன்று இரவு 8 மணிக்கு உரையாற்ற உள்ளார். ஊரடங்கு அறிவிப்புக்குப் பிறகு மூன்றாவது முறையாக பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்த முக்கிய அறிவிப்புகள் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.