விசாகப்பட்டினம் கோபாலபுரம் பகுதியில், எல்ஜி பாலிமர்ஸ் இந்தியா என்ற ரசாயன தொழிற்சாலை உள்ளது.
பொம்மைகள், ரேசர்கள், கொள்கலன்கள் உள்ளிட்ட பிளாஸ்டிக்பொருட்கள் தயாரிக்க பயன்படும் பாலி-ஸ்டைரீன் தயாரிக்கும் தொழிற்சாலை 40 நாட்களாக இயங்கவில்லை என்றும், உற்பத்தியை துவங்குவதற்கான பணிகள் நடைபெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த தொழிற்சாலையை சுற்றி அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகளை சேர்ந்தவர்கள் வீடுகளில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, அதிகாலை 3 மணிக்கு சுவாசிக்க முடியாத அளவுக்கு திடீர் நெடியை உணர்ந்துள்ளனர். மூச்சு முட்டி, வீடுகளுக்குள் இருக்க முடியாமல் தெருக்களுக்கு வந்தவர்கள் வீதிகளிலேயே மயங்கி விழுந்துள்ளனர்.தெருவெங்கும் ஆண்களும் பெண்களும் மயங்கிக் கிடந்த காட்சிகள் பாதிப்பின் தீவிரத்தை உணர்த்துவதாக இருந்தன.
தொழிற்சாலையை சுற்றி சுமார் 2 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் வசித்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. என்னவென்று உணர்வதற்கு முன்னரே பலர் மயங்கி விழுந்துள்ளனர்.விஷவாயு நெடியை சமாளித்து சாலைகளில் வந்து நின்றவர்கள், அதன் பிறகு மயங்கி விழுந்த காட்சிகளும் பதிவாகியுள்ளன.
தகவலறிந்து வந்த போலீசார், குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்ல முடியாத அளவிற்கு விஷவாயுவின் நெடி சூழ்ந்திருந்தது. இதையடுத்து, குடியிருப்பு பகுதிகளுக்குள் இருப்பவர்கள் விரைந்து வெளியேறுமாறு போலீசார் எச்சரித்துள்ளனர். மயங்கி விழுந்தவர்களை இருசக்கர வாகனம், கார் மற்றும் ஆம்புலன்சில் ஏற்றிச் சென்ற காட்சிகளும் நெஞ்சை பதைபதைக்க செய்வதாக உள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதியில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து, பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்ற விசாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் வினய் சந்த் மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். சுவாசிக்க முடியாமல் திணறியவர்களுக்கு ஆக்சிஜன் உதவி வழங்கப்பட்டது. சுமார் 2கிலோமீட்டர் சுற்றளவில் இருந்தவர்களுக்கு வாந்தி, மயக்கம், கண்-தோல் எரிச்சல், சுவாசிப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளன.
போபால் விஷவாயுக் கசிவை நினைவூட்டும் இந்த சம்பவத்திற்கு என்ன காரணம் என்பதோ, கசிந்தது விஷவாயுவா அல்லது எந்த வகை வாயு என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இருப்பினும், பாலி-ஸ்டைரீன் தயாரிக்கும் தொழிற்சாலை என்பதால், ஸ்டைரீன் என்ற வாயு கசிந்ததாகவும், இது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.