மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வருகிற ஜூன் மாதமும், அரிசி அட்டைதாரர்களுக்கு, விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் குறித்து, தமிழ்நாட்டு மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார்.
அதில், மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறிய முதலமைச்சர், அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மக்கள் அதிகம் உள்ள நகரமாகவும், குறுகலான தெருக்கள், நெருக்கமான வீடுகள் உள்ளிட்டவற்றால், சென்னையில் கொரோனா எளிதில் பரவுவதாகவும், இருப்பினும், பெருந்தொற்றை தடுக்கும் பணி, போர்க்கால அடிப்படையில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், முதலமைச்சர் கூறியுள்ளார்.
சென்னையில், இறப்பு விகிதம் மிகவும் குறைவு என்றும், குணமடைவோர் விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசு தீவிரமாக உள்ளதால், அதுகுறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என்றார். வெளிமாநில தொழிலாளர்கள் அவரவர் ஊர்களுக்கு செல்ல, அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், முதலமைச்சர் கூறினார்.
அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வரும் பொதுமக்கள், மாஸ்க் அணிவது, கைகளை கழுவுவது, தனி மனித இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என, இருகரம் கூப்பி முதலமைச்சர் கோரிக்கை விடுத்தார்.