நாட்டில் கொரோனா தொற்று அதிகம் உள்ள சிவப்பு மண்டலங்களை படிப்படியாக தொற்று குறைவான ஆரஞ்சு மண்டலங்களாகவும், ஆரஞ்சு மண்டலங்களை தொற்றே இல்லாத பச்சை மண்டலங்களாகவும் மாற்றுவதே அரசின் வியூகமாக இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.
நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 3 ஆம் தேதி நிறைவடைய உள்ள நிலையில், இன்று காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி அது குறித்து முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
அதன் பின்னர், கொரோனாவில் இருந்து மக்களை காக்கவும், பொருளாதார நடவடிக்கைகளை துவக்கவும் அரசு இரண்டு நீண்ட கால வியூகங்களை வகுத்துள்ளது என முதலமைச்சர்களிடம் மோடி தெரிவித்தார்.
முதலாவதாக தொற்று அதிகம் உள்ள சிவப்பு மண்டலங்களை தொற்று குறைவான ஆரஞ்சு மண்டலங்களாகவும், ஆரஞ்சு மண்டலங்களை தொற்றே இல்லாத பச்சை மண்டலங்களாவும் மாற்ற உசிதமான நடவடிக்கைகளை எடுக்குமாறு முதலமைச்சர்களை மோடி கேட்டுக் கொண்டார்.
பச்சை மண்டலங்களில் பொருளாதார நடவடிக்கைகள் துவங்கும் என்ற மோடி அதே சமயம் சமூக இடைவெளியை எந்த காரணம் கொண்டும் மீறக்கூடாது என அறிவுறுத்தினார்.
பச்சை மண்டலங்களை அதிகரிப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர். சிவப்பு மண்டலங்களிலும் ஹாட்ஸ்பாட்டுகளிலும் கூடுதல் ஜாக்கிரதை தேவை என்ற அவர், அதற்காக சிறப்பு குழுக்களை அமைக்க வேண்டும் எனவும் கூறினார்.
மக்கள் அனைவரும் கட்டாயம் முகவுறை அணிவதுடன் குறைந்தது இரண்டு அடி இடைவெளி விட்டு புழங்க வேண்டும் என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
பொருளாதார நடவடிக்கைகளை துவங்குவதை உறுதி செய்யும் அதே நேரத்தில் வைரசை ஒழிப்பதில் நமது வலுவை அதிகப்படுத்தும் கட்டாயமும் ஏற்பட்டுள்ளது என மோடி கூறினார்.
கடந்த 20 ஆம் தேதி முதல் அறிவிக்கப்பட்ட சில தளர்வுகளால் தொற்று அபாயம் அதிகரித்துள்ளதா என்பதை கண்டறியுமாறு முதலமைச்சர்களை மோடி கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது