ஊரடங்கு இருப்பதால் சென்னை மக்களின் வீடுகளிலேயே வெள்ளிக்கிழமை முதல் ஜோமோட்டோ (zomato), டன்சோ (dunzo) நிறுவனங்கள் மூலம் ஆவின் பால் மற்றும் வெண்ணெய், நெய், பால்கோவா போன்ற பால் உபபொருள்கள் விநியோகிக்கும் பணி தொடங்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிநவீன பாலகங்கள் மூலம் நுகர்வோரின் வீடுகளை தேடிச் சென்று பால், பால் உபபொருள்கள் விநியோகம் செய்வதற்காக ஜோமோட்டோ, டன்சோ நிறுவனங்களுடன் ஆவின் நிறுவனம் இணைந்து செயலாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
ஊரடங்கு நிலவி வரும் நிலையில், சென்னை மக்களுக்கு தங்கு தடையின்றி, சிரமமின்றி, பால், பால் உபபொருள்கள் கிடைக்க ஆவின் நிர்வாகத்தால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.