இந்தியாவில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, தொலைநோக்கு பார்வையுடன், முன்கூட்டியே மேற்கொள்ளப்பட்ட துணிச்சலான நடவடிக்கை என உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.
தொடக்க நிலையிலேயே சுதாரித்துக் கொண்டு நடவடிக்கை எடுக்கத் தவறினால், வைரஸ் பரவுவது மிகவேகமாக, பெரும் பிரச்சனையாக உருவெடுத்து விடும் என உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு பிரதிநிதி டாக்டர் டேவிட் நபரோ தெரிவித்துள்ளார்.
குறைந்த எண்ணிக்கையில் பாதிப்பு இருக்கும் நாடுகளில், ஊரடங்கு போன்றவற்றின் மூலம் வைரஸ் பரவுவதைத் தடுப்பது போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.
அந்த வகையில், குறைந்த எண்ணிக்கையில் கொரோனா பாதிப்பு இருந்தபோதே, இந்தியா ஊரடங்கை கொண்டுவந்தது, தொலைநோக்கு பார்வை கொண்ட முடிவு என டாக்டர் டேவிட் நபரோ தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் நோய் திடீரென மறைந்துவிடும் என நம்புவதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை, எனவே, தற்போதுள்ள நடைமுறைகளை இன்னும் சிறிது காலத்திற்கு பின்பற்ற வேண்டியதிருக்கலாம் என டாக்டர் டேவிட் நபரோ கூறியுள்ளார்.