பிரபல நாட்டு புற பாடகி பரவை முனியம்மாள் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 83.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே பரவை என்ற ஊரில் இருக்கும் இல்லத்தில் அவர் ஓய்வில் இருந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் அவரது உயிர் பிரிந்தது.
நடிகர் விக்ரம் நடித்த தூள் படம் மூலம் திரைப்படத்தில் அறிமுகமாகி, "சிங்கம்போல நடந்து வரான் செல்ல பேராண்டி" என்ற பாடலை பாடி, பட்டிதொட்டி எங்கும் அவர் புகழ்பெற்றார். கடைசியாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மான் கராத்தே என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார்.
அதன் பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வில் இருந்தார். உயிரிழந்த பரவை முனியம்மாவுக்கு 3 ஆண் குழந்தைகள், 3 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் அரசின் கலைமாமணி விருது உள்பட பலவிருதுகளை பெற்றுள்ளார்.