கேரளா, குஜராத் மாநிலங்களில் தலா ஒருவர் விதம் மேலும் 2 பேர் கொரோனாவுக்கு பலியானதால், நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளது.
கேரள மாநிலம் கொச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் 69 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை எடுத்து வந்தார். அவர் இன்று சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார். கேரள மாநிலத்தில் கொரோனா நோய்க்கு ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இதுவாகும்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் மருத்துவமனையில் 46 வயதான நபர் ஒருவர் கடந்த 26ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா உறுதியாகியிருந்த நிலையில், வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக மரணமடைந்தார். இதையும் சேர்த்து நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21-ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் மேலும் 5 பேருக்கும், நாக்பூரில் ஒருவருக்கும் கொரோனா தொற்று நோய் உறுதியாகியுள்ளது. இதனால் அந்த மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 205-ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் மேலும் 47 பேருக்கு கொரோனா உறுதி ஆனதால், அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 184-ஆக அதிகரித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் புதிதாக 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அந்த மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 53-ஆக உயர்ந்துள்ளது.
இதுபோல பல்வேறு பகுதிகளிலும் 160க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால், நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 873-ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் 826 பேர் இந்தியர்கள் என்றும், 47 பேர் வெளிநாட்டினர் என்றும் தெரிவித்துள்ள மத்திய சுகாதார அமைச்சகம்,
775 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 79 பேர் குணமடைந்து விட்டதாகவும் கூறியுள்ளது.