வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் பெற்ற பொதுமக்கள், அனைத்து வகைக் கடன்களையும் திருப்பிச் செலுத்துவதற்கான காலத்தை 3 மாதங்கள் தள்ளி வைத்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மும்பையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது கொரோனா வைரஸ் பரவல் எதிரொலியாக வீழ்ச்சிக்குள்ளாகியுள்ள பொருளாதாரத்துக்குப் புத்துயிர் ஊட்டுவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டார்.
வங்கிகள், நிதிநிறுவனங்களின் பணப்புழக்கத்தை அதிகரித்தல், கடன் திருப்பிச் செலுத்துவதற்கான காலத்தில் தளர்வு உள்ளிட்ட நடவடிக்கைகளை ரிசர்வ் வங்கி எடுக்க உள்ளதாகத் தெரிவித்தார்.
வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்க வேண்டிய பணக் கையிருப்பு விகிதத்தை நூறு புள்ளிகள் குறைத்து 3 விழுக்காடாகக் குறைத்துள்ளதாகத் தெரிவித்தார். இதனால் ஒரு லட்சத்து 37 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாகப் பணப்புழக்கம் ஏற்படும் எனத் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் கடனுக்கான வட்டியை 75 புள்ளிகள் குறைத்து, 4 புள்ளி 4 விழுக்காடாகக் குறைத்துள்ளதாகவும் தெரிவித்தார். வங்கிகள் ரிசர்வ் வங்கியில் வைத்திருக்கும் பணத்துக்கான வட்டி விகிதமும் 90 புள்ளிகள் குறைந்து 4 விழுக்காடாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
கொரோனா பாதிப்பால் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளோருக்கு உதவும் வகையில் அனைத்து வங்கிகள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் பெற்ற கடன்கள், கடனுக்கான தவணைகள் திருப்பிச் செலுத்தும் காலம் 3 மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார். இந்தக் கடன் தள்ளி வைப்புக்கான காலம் மார்ச் 1 முதல் கணக்கிடப்படும் எனவும் குறிப்பிட்டார்.
வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கிய முதலீட்டுக் கடன்கள், வங்கி மேல்வரைப் பற்று ஆகியவற்றுக்கான வட்டி செலுத்தும் காலமும் 3 மாதத்துக்குத் தள்ளி வைக்கப்படுகிறது. இந்தக் காலமும் மார்ச் ஒன்றாம் தேதி முதல் கணக்கிடப்படும். இந்த 3 மாதக் காலத்துக்கான வட்டியை 3 மாதக்கால முடிவில் செலுத்தினால் போதும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.
வங்கிகளும் நிதி நிறுவனங்களும் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கிய முதலீட்டுக் கடன்கள், ஓவர் டிராஃப்ட் ஆகியவற்றுக்கான வட்டி செலுத்தும் காலமும் 3 மாதத்துக்குத் தள்ளி வைக்கப்படுகிறது.
இந்தக் காலமும் மார்ச் ஒன்றாம் தேதி முதல் கணக்கிடப்படும். இந்த 3 மாதக் காலத்துக்கான வட்டியை 3 மாதக்கால முடிவில் செலுத்தினால் போதும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார்.