கொரோனா பரவலை கட்டுப்படுத்த நள்ளிரவு 12 மணி முதல் ஏப்ரல் 14 ம் தேதி வரை, 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களிடம் உரை ஆற்றிய பிரதமர் மோடி, அடுத்த 21 நாட்கள் எவர் ஒருவரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என கையெடுத்து கும்பிட்டு, கேட்டுக்கொண்டார். கொரோனா வைரஸ் காட்டுத்தீ போல வேகமாக பரவி வருவதாக கூறிய அவர், அனைத்து தடுப்பு நடவடிக்கைகளுக்கும் இது ஒரு பெரும் சவாலாக அமைந்துள்ளது என்றார்.
தனித்து இருப்பது மட்டுமே, கொரோனாவில் இருந்து தப்பிக்க ஒரே வழி என கூறிய பிரதமர், வீட்டை விட்டு வெளியே நடமாடினால், கொரோனா உங்கள் வீட்டுக்குள் புகுந்து விடும் என எச்சரித்தார். நாட்டில் உள்ள ஒவ்வொரு மக்களையும் காக்க, தேசத்தை முடக்குவதை தவிர, வேறு வழியில்லை என அவர் குறிப்பிட்டார்.
கொரோனா வேகமாக பரவ துவங்கினால், அதனை கட்டுப்படுத்த முடியாது என கூறிய பிரதமர், அரசுடன் மக்கள், ஒத்துழைத்தால் மட்டுமே 100 சதவீதம் கொரோனாவை ஒழிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
உறவினர்களை கூட வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத் திய பிரதமர், கொரோனா தொற்று ஒருவருக்கு வந்தால், ஒரு வாரத்தில் இருந்து 16 நாட்களுக்குள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பரவும் அபாயம் உள்ளது என எச்சரித்தார்.
கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான மருத்துவ உள்கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசு 15 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். நாட்டு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்தார்.