கொரோனா பாதிப்பின் எதிரொலியாக மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் இரண்டாயிரத்து அறுநூறு புள்ளிகளுக்கு மேல் சரிவைச் சந்தித்தது.
மும்பை பங்குச்சந்தையில் பகல் பத்து மணி அளவில் சென்செக்ஸ் இரண்டாயிரத்து 992 புள்ளிகள் சரிந்து 26ஆயிரத்து 924 ஆக இருந்தது. சென்செக்ஸ் பத்து விழுக்காடு அளவு சரிந்ததால் மேலும் சரிவைத் தடுப்பதற்காகப் பங்குச்சந்தையின் செயல்பாடு முக்கால் மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.
சீனாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுப் பல நாடுகளுக்கும் பரவியதில் இருந்தே அதன் தாக்கம் வணிகம், தொழில்துறைகளில் எதிரொலித்தது. இதனால் பெட்ரோலியம் விலை வீழ்ச்சியடைந்ததுடன், உலக அளவில் பங்குச்சந்தைகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டது.
இந்தியப் பங்குச்சந்தைகளும் 4 வாரங்களாக வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன. இந்நிலையில் இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் இரண்டாயிரத்து 663 புள்ளிகள் வரை சரிந்து 27 ஆயிரத்து 253 ஆக வர்ததகமானது.
தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி 757 புள்ளிகள் வரை சரிந்து ஏழாயிரத்து 988 ஆக வர்த்தகமானது. வங்கிகள், நிதி நிறுவனங்களின் பங்குகள் 10 விழுக்காடு வீழ்ச்சியடைந்தன. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு ரூபாய் குறைந்து 76 ரூபாய் 21 காசுகளாக இருந்தது