கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் மக்கள் சுய ஊரடங்கால், பரபரப்பாக காணப்படும் தமிழகத்தின் தலைநகரமாம் சென்னை மாநகரின் பல இடங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
சென்னையின் எலக்ட்ரானிக் கார்டன் என்று அழைக்கப்படும் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ரிச்சி ஸ்ட்ரீட், மக்கள் சுய ஊரடங்கால் வெறிச்சோடி காணப்படுகிறது. எப்போதும், கூட்டம் அலைமோதும் இப்பகுதியில் உள்ள அனைத்து எலக்ட்ரானிக் கடைகளும் ஊரடங்கை ஏற்று மூடப்பட்டுள்ளன.
சென்னையில் எப்போதும் பரபரப்பாக இருக்கும் அண்ணா சாலை மக்கள் ஊரடங்கினால் வெறிச்சோடி காணப்படுகிறது. போக்குவரத்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருப்பதால் நெரிசல் மிகுந்த இந்த சாலையில் மயான அமைதி நிலவுகிறது.
அவ்வப்போது கால் டாக்ஸிகள், ஆட்டோக்கள் வந்ததால் போக்குவரத்து போலீசார் அவர்களை நிறுத்தி எச்சரித்து மக்கள் ஊரங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
சில கால் டாக்ஸி ஓட்டுநர்கள் நமக்காக தான் இந்த ஊரடங்கு என்பதை புரிந்து கொள்ளாமல் தடுத்து நிறுத்தும் போலீசார் மேல் மோதுவது போல் ஓட்டி தப்பிச் சென்றனர்.
இதே போல் சென்னையில் உள்ள தாஜ் கன்னிமாரா, தி பார்க், தாஜ் கோரமண்டல் உள்ளிட்ட சென்னையின் நட்சத்திர விடுதிகள் மக்கள் ஊரடங்கிற்கு ஆதரவு தெரிவித்து மூடப்பட்டுள்ளன.
சென்னை சூளைமேடு, அரும்பாக்கம், அண்ணா நகர் போன்ற பகுதிகளில் கடைகள், பெரும் வணிக நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
சென்னையின் வணிகஸ்தலமாகவும், எப்போதும் மக்கள் கூட்டம் நிறைந்ததுமாக காணப்படும் தியாகராய நகரில் அனைத்தும் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதுடன், சாலைகளும் வெறிச்சோடி கிடக்கின்றன. மக்கள் சுய ஊரடங்கையொட்டி வெறிச்சோடிய சாலையில் இருசக்கரவாகனங்களில் வந்தவர்களையும் போலீசார் அறிவுறுத்தி அனுப்பினர்.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, மக்கள் சுய ஊரடங்கால் வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாளும் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்கு வந்து செல்லக் இந்த மருத்துவமனையின் புறநோயாளிப்பிரிவு மட்டுமின்றி கொரோனா பரிசோதனைக்கு என அமைக்கப்பட்ட சிறப்பு வார்டும் வெறிச்சோடிக்கிடக்கின்றன.
மக்கள் சுய ஊரடங்கையொட்டி சென்னை மெரினா கடற்கரை மூடப்பட்டதால், அப்பகுதி மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடின. சென்னையின் முக்கிய பொழுதுபோக்கு இடமாக திகழும் மெரினா கடற்கரையில் உள்ள கந்தி சிலை, கலங்கரை விளக்கம் உள்ளிட்ட பகுதிகள் வெறிச்சோடின. இதனிடையே, கடற்கரை சாலை மற்றும் அங்குள்ள தடுப்புகளில் கிருமிநாசினி தெளிப்பு மற்றும் சுத்தப்படுத்தும் பணிகளில் சுகாதாரப்பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் சுய ஊரடங்கையொட்டி சென்னையில் பல இடங்கள் வெறிச்சோடிய நிலையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. இன்று காலை டெல்லி, ஹைதராபாத், கோவை உள்ளிட்ட இடங்களில் இருந்து வந்த பயணிகள், போக்குவரத்து வசதி இல்லாததால், ரயில் நிலையத்திலேயே மணிக்கணக்கில் காத்திருந்தனர்.
பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ரயிலிகளில் பயணிக்க முன்பதிவு செய்ய உள்ளூர் பயணிகள் மட்டுமின்றி வடமாநிலத்தவர்களும் நீண்டவரிசையில் நின்றனர். இதனிடையே, கூட்ட நெரிசலைக்குறைக்க போலீசார் ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்திய வண்ணம் இருந்தனர்.
மக்கள் சுய ஊரடங்கு அழைப்பை ஏற்று சென்னை மயிலாப்பூர் பகுதிவாசிகள் வீடுகளின் கதவுகளை கூட திறக்காததால், அப்பகுதி வெறிச்சோடியது. மக்கள் அடர்த்தி மிகுந்த பகுதியாக கருதப்படும் இப்பகுதியில் வீடுகளுக்குள்ளேயே பெரும்பாலானோர் இருந்ததால் அப்பகுதி வெறிச்சோடின. இதனிடையே வெறிச்சோடிய வீதிகளில் தூய்மைப்படுத்தும் பணிகளும் துரிதமாக நடைபெற்றன.