இந்தியாவில் மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 283-ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் பல்வேறு மாநிலங்களிலும் வெள்ளிக்கிழமை நிலவரப்படி கொரோனாவுக்கு 4 பேர் பலியாகியிருந்ததுடன், 223 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு ஸ்காட்லாந்தில் இருந்து வந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதேபோல் மேலும் 10 பேருக்கு கொரோனா பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
குஜராத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனையில் உறுதிபடுத்தப்பட்டது. இதனால் குஜராத்தில் பாதித்தோரின் எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகத்தில் மேலும் 3 பேருக்கும், சண்டீகரில் மேலும் ஒருவருக்கும், பஞ்சாபில் மேலும் 2 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பஞ்சாபில் கொரோனா உறுதி செய்யப்பட்ட 2 பேரில் ஒருவர், பிரிட்டனில் இருந்து திரும்பி வந்தவர் ஆவார்.
இவர்களையும் சேர்த்து, சனிக்கிழமை மட்டும் நாட்டில் மொத்தம் 60 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியிருக்கிறது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 283ஆக உயர்ந்துள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரங்களில், மகாராஷ்டிராவில் மொத்தம் 63 பேர் பாதிக்கப்பட்டு, நாட்டிலேயே அதிகம் பாதித்தோர் மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளது. இதற்கடுத்து கேரளா மாநிலத்தில் 40 பேரும், டெல்லியில் 26 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 24 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதேபோல் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கையில் 244 பேர் இந்தியர்கள் என்றும், 39 பேர் வெளிநாட்டினர் என்றும் தெரிவித்துள்ள மத்திய சுகாதார அமைச்சகம், 23 பேர் இதுவரை குணமாகியிருப்பதாகவும் அறிவித்துள்ளது.