மத்தியப் பிரதேச முதலமைச்சர் பதவியில் இருந்து கமல்நாத் விலகியுள்ளார். ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 22 பேர் பதவி விலகியதால் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மை இழந்தது.
இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுநர் உத்தரவிட்டும் அதை ஏற்க மறுத்த பேரவைத் தலைவர் அவையை ஒத்தி வைத்தார். இதனால் பாஜகவினர் உச்சநீதிமன்றத்தை அணுகியதை அடுத்து, வெள்ளியன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது.
இந்நிலையில் போபாலில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் கமல்நாத், தனது அரசைக் கவிழ்க்க ஜோதிராதித்ய சிந்தியாவுடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டிய பாஜக, 22 பேரை பெங்களூரில் சிறை வைத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டினார். பதவி விலகத் தான் முடிவெடுத்துள்ளதாகவும், ஆளுநரிடம் பதவி விலகல் கடிதத்தை அளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.