மத்தியப் பிரதேச சட்டமன்றத்தில் இன்று பிற்பகல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
பெரும்பான்மை ஆதரவு இல்லாததால் அதற்கு முன்பாகவே கமல்நாத் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜோதிர் ஆதித்யா சிந்தியா தலைமையில் 22 எம்.எல்.ஏக்கள் விலகியதை அடுத்து கமல்நாத் அரசுக்கு நெருக்கடி உருவாகியுள்ளது.
ஆளுநர் நம்பிக்கையை நிரூபிக்கும்படி கமல்நாத்துக்கு உத்தரவிட்ட நிலையில் சபாநாயகருக்கு ஆளுநர் உத்தரவிட முடியாது என காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு குதிரை பேரத்திற்கு வழி விடாமல் உடனடியாக மத்தியப் பிரதேச சட்டமன்றத்தில் கமல்நாத் தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, 16 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்பதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.