உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கண்டன முழக்கங்கள், வெளிநடப்புக்கு இடையே மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றுக் கொண்டார்.
மாநிலங்களவைக்கு அவர் வந்தபோது, வெட்கம், அவமானம் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். இது உறுப்பினர்களுக்கு அழகல்ல எனக் கூறி, அவர்களை அமைதிப்படுத்த வெங்கய்யா நாயுடு முயன்றார்.
"ஓய்வுக்கு பிந்தைய பதவி நியமனங்கள், நீதித்துறை சுதந்திரத்தின் மீதான தழும்பு" என முன்னர் ரஞ்சன் கோகோய் கூறியதை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கண்டனக்குரல் எழுப்பினர்.
ஆனால் அதைப் பொருட்படுத்தாது ரஞ்சன் கோகோய் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார். பதவிப் பிரமாணம் முடிவடைவதற்குள்ளேயே, சமாஜ்வாதி கட்சி தவிர மற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.