கொரானா பாதிப்பு எதிரொலியால் இந்தியப் பங்குச்சந்தைகளில் பத்து விழுக்காட்டுக்கு மேல் சரிவு ஏற்பட்டதால், அவற்றின் வணிகம் 45 நிமிடங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.
உலக நாடுகளில் கொரானா பாதிப்பு, பெட்ரோலிய விலை வீழ்ச்சி, தொழில் வணிகத்துறைகளில் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி பாதிப்பு ஆகியவற்றால் கடந்த இரு வாரங்களாகப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றன.
இந்நிலையில் இன்றைய வணிகநேரத் தொடக்கத்திலேயே பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் மூவாயிரத்து 214 புள்ளிகள் சரிந்து 29 ஆயிரத்து 565 ஆக இருந்தது. பின் ஓரளவு மீட்சியடைந்து மூவாயிரத்து 91 புள்ளிகள் சரிந்து 29 ஆயிரத்து 687 ஆக இருந்தது.
தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி 966 புள்ளிகள் சரிந்து எட்டாயிரத்து 624 ஆக இருந்தது. இரண்டு பங்குச்சந்தைகளிலும் பத்து விழுக்காட்டுக்கு மேல் சரிவு ஏற்பட்டதால் அவற்றின் வணிகம் 45 நிமிடங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது.
கடும் வீழ்ச்சி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட பங்குச்சந்தைகள் 45 நிமிடங்களுக்குப் பின் தொடங்கியபோது மீண்டும் சரிவு ஏற்பட்டது. மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் மூவாயிரத்து 518 புள்ளிகள் சரிந்து 29 ஆயிரத்து 206 ஆக இருந்தது.
தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி ஆயிரத்து 36 புள்ளிகள் சரிந்து எட்டாயிரத்து 554 ஆக இருந்தது. அதன்பின்னர் பங்குச்சந்தைகள் மீட்சி கண்டு வருகின்றன.
இதற்கிடையே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து 74 ரூபாய் 50 காசுகளாக இருந்தது. 2018 ஆம் ஆண்டு அக்டோபரில் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 74 ரூபாய் 48 காசுகளாக இருந்ததே இதற்கு முன் குறைந்த அளவாகும். இந்நிலையில் வரலாற்றிலேயே முதன்முறையாக 74 ரூபாய் 50 காசுகள் என்கிற குறைந்த அளவைத் தொட்டுள்ளது.