மத்தியப் பிரதேசத்தில் 22 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகியுள்ள நிலையில், சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சியமைக்க உரிமை கோர உள்ளது.
மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியில் 18 ஆண்டுகளாக பணியாற்றி வந்த ஜோதிர் ஆதித்யா சிந்தியா அக்கட்சியில் இருந்து விலகினார். நேற்று அவர் பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்தார். இன்று அவர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜோதிர் ஆதித்ய சிந்தியா தலைமையில் ஆறு அமைச்சர்கள் உட்பட 22 எம்.எல்.ஏக்கள் விலகியதை அடுத்து கமல்நாத் தலைமையிலான அரசு கவிழக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே முதலமைச்சராக இருந்த சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் மீண்டும் பாஜக அரசு அமையும் என அக்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் முதலமைச்சர் கமல்நாத் தலைமையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. இதில் 88 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் நான்கு சுயேட்சை எம்.எல்.ஏக்களும் கலந்துக் கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்நாத் ஆட்சிக்கு எந்த வித ஆபத்தும் இல்லை என்று தெரிவித்தார். பெரும்பான்மையை நிரூபித்து 5 ஆண்டு ஆட்சியை நிறைவு செய்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் பாஜக கட்சி அலுவலகம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த சொகுசுப் பேருந்துகள் மூலமாக போபால் விமானநிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது பாஜக எம்.எல்.ஏக்கள் ஆடிப்பாடி கொண்டாடினர். தாங்கள் டெல்லி அழைத்துச் செல்லப்படுவதாக பாஜக எம்.எல்.ஏக்கள் தெரிவித்தனர்.