கச்சா எண்ணெய் விலை கடும் சரிவு, கொரானா பீதி ஆகியவற்றால் பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்ததால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் 7 லட்சத்து 72 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவின் போட்டியைச் சமாளிப்பதற்காக சவூதி அரேபியா கச்சா எண்ணெய் விலையை அதிரடியாகக் குறைத்தது. இதனால் பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 14 டாலர் குறைந்து 31 டாலராக உள்ளது.
ஒரே நாளில் எண்ணெய் விலை 31 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது. வளைகுடாப் போருக்குப் பின்னர் கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் இவ்வளவு குறைந்தது தற்போது தான் என்று கூறப்படுகிறது.
இதனால் உலக அளவில் பங்குச்சந்தைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே கொரோனா பரவல் எதிரொலியால் இரு வாரங்களாகத் தொடர்ந்து வீழ்ச்சியைச் சந்தித்து வந்த இந்தியப் பங்குச்சந்தைகள் மேலும் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தன. பிற்பகல் ஒன்றரை மணிக்கு சென்செக்ஸ் இரண்டாயிரத்து 443 புள்ளிகள் வீழ்ச்சியடைந்தது. இருப்பினும் வணிகநேர முடிவில் ஓரளவு மீட்சியடைந்தது.
வணிகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் ஆயிரத்து 942 புள்ளிகள் சரிந்து 35 ஆயிரத்து 635 ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி 538 புள்ளிகள் சரிந்து பத்தாயிரத்து 451 ஆக இருந்தது. எண்ணெய் நிறுவனங்கள், வங்கிகள், உலோகத் தொழில் நிறுவனங்கள், வாகன உற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றின் பங்குவிலைகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன.
அதிக அளவாக ஓஎன்ஜிசி நிறுவனப் பங்குகள் 16 விழுக்காடும் ரிலையன்ஸ் நிறுவனப் பங்குககள் 13 விழுக்காடும் வீழ்ச்சியடைந்தன. மும்பை பங்குச்சந்தையில் 144 புள்ளி மூன்று ஒன்று லட்சம் கோடி ரூபாயாக இருந்த சந்தை முதல் 136 புள்ளி ஐந்து ஒன்பது லட்சம் கோடியாகக் குறைந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் 7 லட்சத்து 72 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.