கடந்த வாரத்தில் சரிவைச் சந்தித்த இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று எழுச்சியுடன் வணிகத்தைத் தொடங்கியுள்ளன. மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் 786 புள்ளிகள் உயர்ந்து 39 ஆயிரத்து 83 ஆக இருந்தது.
தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு நிப்டி 174 புள்ளிகள் உயர்ந்து 11 ஆயிரத்து 378 ஆக இருந்தது. கொரோனா வைரஸ் பரவல் குறித்த தாக்கத்தால் கடந்த வாரத்தில் பங்குச்சந்தையில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் இந்த வாரத்தின் முதல் நாளில் வணிகம் ஏற்றத்துடன் தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பங்குச்சந்தையின் ஏற்றத்தால் கடந்த வாரம் முதலீட்டாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பில் 2 லட்சம் கோடி ரூபாய் ஈடுகட்டப்பட்டுள்ளது.