புதிய இந்தியாவை படைக்க, மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பு அவசியம் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருக்கிறார்.
உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவும் வகையில் நடைபெற்ற நலத்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்து, பயனாளர்களுக்கு சாதனங்களை வழங்கினார்.
19 கோடி மதிப்பிலான சாதனங்கள் 26 ஆயிரம் பயனாளர்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் பேசிய பிரதமர் மோடி, புதிய இந்தியாவை உருவாக்க ஒவ்வொரு மாற்றுத்திறனுள்ள இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி சிறுவர்களின் பங்களிப்பும் அவசியமானது என்றார்.
தொழில்துறை, சேவைத்துறை அல்லது விளையாட்டுத் துறையாக இருந்தாலும், மாற்றுத்திறனாளிகளின் திறமைகள், தமது ஆட்சியில் தொடர்ந்து ஊக்குவிக்கப்படுவதாக பிரதமர் குறிப்பிட்டார். அனைத்து மக்களுக்கும் நன்மை மற்றும் நீதி கிடைப்பதை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
முந்தைய ஆட்சியைப் போன்று இல்லாமல், தற்போது, தமது தலைமையிலான மத்திய பாஜக அரசு, மக்களில் நலனில் அதீத அக்கறையோடு செயல்படுவதாக, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.