இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று ஒரே நாளில் ஏற்பட்ட கடும் வீழ்ச்சியால் பங்கு முதலீட்டாளர்களுக்கு ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சீனா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸ் உலக நாடுகளின் வணிகம், தொழில் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த சில நாட்களாக இந்தியப் பங்குச்சந்தையிலும் அது எதிரொலித்து வருகிறது. இன்றைய வணிகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீட்டெண் சென்செக்ஸ் ஆயிரத்து 448 புள்ளிகள் சரிந்து 38 ஆயிரத்து 297 ஆக இருந்தது.
தேசியப் பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீட்டெண் நிப்டி 414 புள்ளிகள் சரிந்து 11 ஆயிரத்து 219 ஆக இருந்தது.
உலோகம், மோட்டார் வாகனம் ஆகிய தொழில்துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களின் பங்கு மதிப்பு ஏழு விழுக்காடு முதல் 13 விழுக்காடு வரை வீழ்ச்சியடைந்தது. இதனால் பங்கு முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.